×

இலங்கை அணியை வீழ்த்தியது நியூசிலாந்து: போல்ட் விக்கெட் வேட்டை

சிட்னி: உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், இலங்கை அணியுடன் மோதிய நியூசிலாந்து அணி 65 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி 4 ஓவரில் 15 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன், டிவோன் கான்வே தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, கேப்டன் கேன் வில்லியம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த நிலையில், கிளென் பிலிப்ஸ் - டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

பிலிப்ஸ் 39 பந்தில் அரை சதம் அடித்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்த நிலையில், டேரில் மிட்செல் 22 ரன் எடுத்து (24 பந்து) ஹசரங்கா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் 5 ரன்னில் வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட்டு இலங்கை பந்துவீச்சை சிதறடித்த பிலிப்ஸ் 61 பந்தில் சதத்தை நிறைவு செய்தார். பேட்டிங் வரிசையில் 4வது அல்லது அதற்கு கீழாக வந்து உலக கோப்பை டி20ல் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை பிலிப்ஸ் வசமானது.

அவர் 104 ரன் (64 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி லாகிரு குமாரா பந்துவீச்சில் ஷனகா வசம் பிடிபட்டார். ஈஷ் சோதி 1 ரன் எடுத்து ரன் அவுட்டாக, நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. சான்ட்னர் 11 ரன், டிம் சவுத்தீ 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலன்க்கை பந்துவீச்சில் ரஜிதா 2, தீக்‌ஷனா, தனஞ்ஜெயா, ஹசரங்கா, லாகிரு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

சவுத்தீ வேகத்தில் நிசங்கா டக் அவுட்டாகி வெளியேற, குசால் (4), தனஞ்ஜெயா (0) இருவரும் போல்ட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த சரித் அசலங்காவும் 4 ரன் எடுத்து போல்ட் பந்துவீச்சில் ஆலன் வசம் பிடிபட, இலங்கை அணி 3.3 ஓவரில் 8 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து விழி பிதுங்கியது. அடுத்து வந்த வீரர்களில் ஓரளவு தாக்குப்பிடித்த பானுகா ராஜபக்ச 34 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தசுன் ஷனகா 35 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இலங்கை அணி 19.2 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

கசுன் ரஜிதா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட் 4 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சான்ட்னர், சோதி தலா 2, சவுத்தீ, பெர்குசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து 65 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. பிலிப்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : New Zealand ,Sri Lanka , New Zealand beats Sri Lanka: Bolt wicket hunt
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...