புதுக்கோட்டை திருமண விழாவில் உடல் உறுப்பு தானத்துக்கு விண்ணப்பித்த மணமகன்

ஆலங்குடி: புதுக்கோட்டை அருகே திருமண விழாவில் மணமகளுக்கு தாலி கட்டியவுடன் உடல் உறுப்பு தானம் செய்ய மணமகன் ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ராஜேஷ். திமுக உறுப்பினரான ராஜேஷ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் உள்ள ரத்ததான கழகத்தில் இணைந்து இதுவரை 15 முறை ரத்த தானம் செய்துள்ளார். இந்த நிலையில், ராஜேஷுக்கும், அணவயல் பெரியசாமி மகள் உமாமகேஸ்வரிக்கும்  சேந்தங்குடியில் உள்ள மணமகன் இல்லத்தில் கடந்த 28ம்தேதி திருமணம் நடைபெற்றது.

அப்போது மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன் ராஜேஷ், தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், மணமகள் நர்ஸ் என்பதால் உடல் உறுப்பு தானம் குறித்து அவர் அறிந்து வைத்திருந்தார். எனவே அவரும் ஒத்துக்கொண்டார். முதற்கட்டமாக கண் தானம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளேன். விபத்துகளில் பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதை காண்கிறோம்.

அது போல நடக்க கூடாது. எனவே உயிருடன் இருக்கும் வரை ரத்த தானம், இறக்கும் நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார். திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவினர்கள் ராஜேஷின் இந்த செயலை நெகிழ்ச்சியோடு பாராட்டினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னங்கன்றுகளை மணமக்கள் பரிசாக வழங்கினர்.

Related Stories: