×

சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா; திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் 6ம் நாளான இன்று (30ம் தேதி) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 5ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. 7 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மதியம் 12.45 மணிக்கு மேல் ஜெயந்திநாதர், யாகசாலையில் இருந்து எழுந்தருளி, மேளவாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் வந்து சேர்ந்தார்.

பின்னர் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி, கிரி வீதியுலா வந்து திருக்கோயில் சேரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரம் இன்று  மாலை நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளும் ஜெயந்திநாதர் பக்தர்களின் சரணகோஷம் முழங்க சண்முகவிலாசம் சென்றடைகிறார். மதியம் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சூரசம்ஹாரத்திற்காக மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளும் ஜெயந்திநாதர், பல்வேறு உருவெடுத்து வரும் சூரனை கடற்கரையில் சம்ஹாரம் செய்கிறார். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.  இதைத்தொடர்ந்து கிரி பிரகாரம் வழியாக உலா வரும் ஜெயந்திநாதர் திருக்கோயிலை வந்தடைகிறார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு சஷ்டி பூஜைத் தகடுகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தை காண நேற்று அதிகாலை முதலே கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவியத்துவங்கினர். ஏற்கனவே திருச்செந்தூரில்  70 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட 18 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதால் 3 ஆயிரம் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரை மணலில் 5 லிங்கம்
திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் 5 லிங்கங்கள் செய்து ஏராளமான சாதுக்கள் சிவபூஜை மேற்கொண்டனர். தர்மபுரி அரூர் அருகே தீர்த்தமலை மடாதிபதி பசுமை சித்தர் என்றழைக்கப்படும் வைத்தியலிங்க சுவாமி தலைமையில் சாதுக்கள், இந்த சிவலிங்கத்தை அமைத்திருந்தனர்.

Tags : Subramanian Swamy Temple Gandashashti Festival ,Tiruchendur , Subramanian Swamy Temple Gandashashti Festival; Surasamharam today in Tiruchendur: Lakhs of devotees gathered
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...