×

டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்: ஒன்றிய அரசு புதிய உத்தரவு

* குறைதீர்ப்பு குழுவும் அமைப்பு

புதுடெல்லி: பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இந்திய சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ஒன்றிய புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. பயனர்களின் புகார்களின் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழுவையும் ஒன்றிய அரசு நியமிக்க உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களையும், ஓடிடி தளங்களையும் இந்தியாவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் புரளி, பொய் செய்திகள், ஆட்சேபத்துக்குரிய தகவல்கள், ஆபாச தகவல்கள் போன்றவை அதிகளவில் இடம் பெறுகின்றன. ஆனால், இவற்றை நீக்குவது, கட்டுப்படுத்துவது, சர்ச்சைக்குரிய பயனர்களின் கணக்குகளை முடக்குவது அல்லது முழுமையாக நீக்குவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இந்த சமூக ஊடகங்களின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவற்றில் அரசால் தலையிட முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் கடந்தாண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்த விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில், ‘சமூக ஊடகங்கள் வழிகாட்டு விதிமுறைகள் மற்றும் மின்னணு ஊடக நெறிமுறை - 2021’ என்ற பெயரில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கான அரசாணையை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண, அரசு சார்பில், ‘குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழு’க்கள், பல்வேறு மட்டங்களில் 3 மாதங்களில்  அமைக்கப்படும்.

* பயனாளிகள் அளிக்கும் புகார்களை 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும், 15 நாட்களுக்குள் அந்த புகாருக்கு தீர்வு காண வேண்டும்.
* புகாருக்கு உள்ளான வீடியோ, தகவல்கள்,  புகார் தீர்க்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் நீக்கப்பட வேண்டும்.
* அப்படி பயனர்களின் குறைகளை சமூக ஊடகங்கள் தீர்க்கவில்லை என்றால், அரசு அமைக்கும் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழுவிடம் முறையிடலாம். இதில், இந்த குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு சமூக ஊடகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*  டிவிட்டர், பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக  ஊடகங்களும்  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஒன்றிய அரசின் புதிய சமூக ஊடக விதிமுறைகள், இந்த ஊடகங்களை கட்டுப்படுத்த அரசு செய்யும் முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த புதிய விதிமுறையின் மூலம், சமூக வலைதளங்களை தனது கட்டுபாட்டின் கீழ் ஒன்றிய அரசு கொண்டு வருகிறது என்றும் அவை குற்றம்சாட்டி உள்ளன.

Tags : Twitter ,Facebook ,Union government , Social media including Twitter, Facebook must abide by Indian law: Union government new order
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...