×

ரூ.1,530 கோடி வங்கி கடன் மோசடி செய்த பிரபல ஜவுளி தொழிலதிபர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

லூதியானா: ரூ.1,530 கோடி வங்கி மோசடி வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்த பிரபல ஜவுளி தொழிலதிபரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நீரஜ் சலுஜா என்பவர், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 10 வங்கிகளிடம் இருந்து, முறைகேடான ஆவணங்களை சமர்பித்து பல கோடி ரூபாய் கடன் பெற்றார். இவரது நிறுவனம் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. வங்கிக்கடன் பெற்று மோசடி செய்ததாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 10 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதில், ‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 10 வங்கிகளிடம் நீரஜ் சலுஜா மற்றும் அவரை சார்ந்தவர்கள் ரூ. 1,530.99 கோடி அளவிற்கு ஏமாற்றியுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் நீரஜ் சலுஜா, நிர்வாகிகள், மூத்த அலுவலர்கள் உட்பட பலர் மீது கடந்த 2020ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நீரஜ் சலுஜாவை நேற்றிரவு சிபிஐ கைது செய்தது. அவரை இன்று மொஹாலி (பஞ்சாப்) நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : CBI , Famous textile businessman arrested for Rs 1,530 crore bank loan fraud: CBI action
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...