×

உலக சிக்கன நாள் தினம் ‘சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ‘சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது’ என்று உலக சிக்கன நாள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின் வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. ‘பணத்தை தண்ணீராய் செலவழித்தல்’ என்கிற உவமையிலிருந்து மாறுபட்டு, ‘தண்ணீரை பணம் போல செலவழிக்கும்’ கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது.

அக்டோபர் 30ம் நாளை உலக சிக்கன நாளாக நம்நாடு கடைப்பிடிக்கிறது. இன்று ‘குறைந்தபட்ச தேவைகளுடனான வாழ்க்கை’ என்கிற கருத்தியல் விரைவாக பரவி வருகிறது. ஒரு பொருளை, ‘தேவையா?’ என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது. விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்ச தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்து வைக்கிறார்கள். பெறுகிற வருமானத்தில் 3ல் ஒரு பங்கை சேமிப்பிற்கும், 3ல் ஒரு பங்கை உணவு, உடை போன்றவற்றிற்கும், 3ல் ஒரு பங்கை கல்வி, பராமரிப்பு, வரி போன்றவற்றிற்கும், 10ல் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கிறார்களோ, அவர்களே வளமான வாழ்க்கையை வாழ முடியும்.

சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதை சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலக தொடர் சேமிப்பு கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Tags : World Austerity Day ,CM K. ,Stalin , On World Thrift Day 'Saving makes one's life hopeful': Chief Minister M K Stalin's greetings
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...