திருமயம் அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-பொதுப்பணித்துறை நடவடிக்கை

திருமயம் : திருமயம் அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டி காணப்பேட்டை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கானா கண்மாயில் அப்பகுதியை சேர்ந்த சிலர் சுமார் 5 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர், திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உறுதி செய்தனர். இந்நிலையில் கண்மாய் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சிலர் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராததால் அதிகாரிகள் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற துரித நடவடிக்கையில் இறங்கினர்.

இதனிடையே நேற்று போலீஸ் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அரிமளம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கமலேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் கண்மாய் ஆக்கிரமிப்பை ஜேசிபி கொண்டு சுமார் ஒரு ஏக்கர் அளவிலான கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்டெடுத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: