திருத்துறைப்பூண்டி நகராட்சி மூலம் ரூ.150 லட்சத்தில் வெட்டுக்குளம் தூர்வாரும் பணி தீவிரம்-நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி 2வது வார்டில் வெட்டுக்குளம் ரூ.150 லட்சத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு நகர்புற மேம்பாடு திட்டத்தில் நகராட்சி குளங்கள், பாசன, வடிகால் வாய்கால்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ரூ.149 லட்சத்தில் திருக்குளம் மேம்பாடு செய்யும் பணி நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் உள்நோயளிகள் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்கு நவீன கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

ரூ.295 லட்சத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 மண் சாலைகள் ரூ.161.25 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஜேகேஆர் கார்டன் பகுதியில் ரூ.40 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேளிக்குளம் ரூ.64 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சாய் நகரில் பூங்காவினை ரூ.20.50 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியும் நடைபெறுகிறது.

வீரன் நகரில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நமக்கு நாமே திட்டத்தில் நகரில் 1,2,5,9,10,16,24 ஆகிய வார்டுகளில் வணிகப் பகுதிகளில் ரூ.12.56 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.150 லட்சத்தில் வாழ்வாதாரம் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதை சாலையிலுள்ள குப்பை கிடங்கிலுள்ள குப்பைகளை ரூ.109.60 லட்சத்தில் பயோ மைனிங் முறையில் தரம் பிரித்து இடத்தினை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் 2வது வார்டில் உள்ள வெட்டுக்குளம் ஒரு காலத்தில் நகர பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். குளத்தை சுற்றி 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அவர்களும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 1 வது வார்டு, 3வது வார்டு மக்களும் மன்னார்குடி சாலையில் வந்து செல்பவர்கள் பெரும்பாலானோர் இந்த குளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த குளம் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. குளம் தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். நகர்மன்ற தலைவர் முயற்சியில் நகராட்சி பொறியாளர் பிரதான்பாபு நேரடி மேற்பார்வையில் வெட்டுக்குளம் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

குளம் தூர்வாரும் பணி துவங்கியது முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இருந்த போதிலும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குளம் தூர்வாரும் போது தடுப்பு சுவர், நடைபாதை, பூங்கா, மின்விளக்கு போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தூர்வாரிய பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து 2வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் வசந்த் கூறுகையில், நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஒவ்வொரு வீடுவீடாக சென்று மக்கள் குறைகள் கேட்டு நிறைவேற்றி வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக நகர பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் முதல்கட்டமாக தண்ணீர் இறைத்து தூய்மை பணி நடந்துள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு திருக்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. வெட்டுக்குளம் தூர்வார துவங்கியதும் ஒருபக்கம் பல்வேறு இடர்பாடுகள் மறுபக்கம் தொடர் மழை அதிலும் பணி நடைபெறுகிறது.  அவ்வப்போது நகர்மன்ற தலைவர், ஆணையர், பொறியாளர் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். வெட்டுக்குளம் தூர்வாருவதற்கு பரிந்துரை செய்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாளர், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோருக்கு வார்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Related Stories: