×

கரடி இறந்த சம்பவத்தில் வழக்கு, துப்பாக்கியை காட்டி மிரட்டல் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா-நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நெல்லை : களக்காடு  வனத்துறை அதிகாரியை கண்டித்தும், துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாகவும் கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை கலெக்டர்  அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது.  விவசாயிகளின் கேள்விகளுக்கும், மனுக்களுக்கும் கலெக்டர் விஷ்ணு மற்றும் அரசு  அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணைத் தலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்ட் களக்காடு ஒன்றிய  செயலாளர் முருகன் ஆகியோர்  தலைமையில் வந்த விவசாயிகள், குறைதீர்க்கும் நாள்  கூட்ட அரங்கிற்குள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  களக்காடு வனத்துறை துணை இயக்குநர் விவசாயிகள் மீது பொய் வழக்கு  போடுவதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாகவும், வனத்துறை சார்பில் விவசாயிகள்  மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரியும் கோஷமிட்டனர். அவர்களிடம்  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், பாளையங்கோட்டை தாசில்தார்  ஆனந்தபிரகாஷ், பாளை மண்டல துணை தாசில்தார் காஜா காரிபுன் நவாஸ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வனத்துறை போட்டுள்ள வழக்கை வாபஸ்  பெற்றால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகர்வோம் எனக் கூறி விவசாயிகள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்தப் போராட்டம்  நீடித்தது. பின்னர் பெரும்படையார், முருகன் ஆகியோர் கூட்ட அரங்கத்தில்  இருந்த கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோரிடம் மனு  அளித்தனர்.

அப்போது களக்காட்டில் கரடி இறந்த சம்பவத்தில் வனத்துறையினர்  5 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். பகல்  நேரங்களிலும், இரவு நேரங்களிலும் வனத்துறையினர், கிராமங்களில் துப்பாக்கியை  வைத்துக் கொண்டு விவசாயிகள், பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.

 மின்சார  வேலி போட்டு வன விலங்குகளை வேட்டையாடுவதாக கூறி மிரட்டுகின்றனர். இதனால்  விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.  எனவே வனத்துறையினர் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.  துணை இயக்குநர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்  தெரிவித்தனர்.
அதற்கு கலெக்டர் விஷ்ணு, கோரிக்கைகள் மீது உரிய விசாரணை  நடத்துவதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். அதன் பிறகே அனைவரும் கலைந்து  சென்றனர். விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dharna-Nellai , Nellai: Farmers at Nellai collector's office by reprimanding the Kalakkadu forest officer and threatening him with a gun.
× RELATED மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு...