குமரி எல்லை அருகே ஆசிட் கலந்த ஜூஸ் கொடுத்து காதலன் கொலையா?

*குமரி இளம்பெண் மீது வாலிபரின் பெற்றோர் புகார்

திருவனந்தபுரம் :  பாறசாலையை சேர்ந்த வாலிபரை ஜூசில் ஆசிட் கலந்து கொடுத்து காதலி மற்றும் அவரது பெற்றோர் கொலை செய்ததாக வாலிபரின் உறவினர்கள் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி எல்லையிலுள்ள பாறசாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்து வந்தார். களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி ஷரோன் ராஜை அவரது காதலி போனில் அழைத்து, பெற்றோர் வெளியே சென்று விட்டதால் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய நண்பருடன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.  சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஷாரோன் ராஜ் தன்னுடைய வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். தன்னுடைய காதலி குடிப்பதற்கு கஷாயமும், ஜூசும் தந்ததாக கூறிய அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார்.

மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து அவரை பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கடந்த இரு தினங்களுக்கு முன் ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடலில் விஷம் கலந்திருந்தது தான் மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். இந்நிலையில் தனது மகனை காதலியும், அவரது பெற்றோரும் சேர்ந்து  கொன்றதாக ஷரோன் ராஜின் தந்தை ஜெயராஜன் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: என்னுடைய மகன் ராமன்சிறையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு ஒரு ராணுவ வீரருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் மரணமடைந்து விடுவார் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த தோஷத்தை போக்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் ஷாரோன் ராஜை கட்டாயப்படுத்தி அந்தப் பெண் தனக்கு தாலி கட்ட வைத்துள்ளார்.

இதன்பின் ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து ஜூசில் ஆசிட் கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதற்கு முன்பாக ஒரு கஷாயத்தையும் குடிக்க கொடுத்துள்ளார். அதைக் குடித்த பின்னர்தான் என்னுடைய மகனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது.மூடநம்பிக்கையின் பேரில் என்னுடைய மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக பாறசாலை போலீசில் புகார் கொடுத்தும் உரிய விசாரணை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்றும், கூடுதல் பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான முடிவு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும்  பாறசாலை போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஷாரோன் ராஜின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த விளக்கத்தில் போலீசாருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: