ஆய்வு பணிகள் நிறைவடைந்தன வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம்-மீனவர் குறைதீர் கூட்டத்தில் தகவல்

நாகர்கோவில் : குமரி மாவட்ட மீனவர் குறைதீர்  கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், மீனவ பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பின்னர் கடந்த மாதம் மீனவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்காக பதில்கள் தொடர்பாக அந்தந்த துறை அதிகாரிகள் அளித்திருந்த பதில் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

இதில் மீனவர்கள் பேசியதாவது: கடல் சீற்றத்தில் இருந்து அழிக்கால் கிராமத்தை பாதுகாக்க அழிக்கால் தனியார் துறைமுக கிழக்கு கட்டுமான முகப்பை 300 மீட்டர் நீட்டித்து துறைமுகத்துடன் இணைத்திட வேண்டும். வாணியக்குடி மீனவ கிராமத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இங்கு அமைய உள்ள மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் பங்களிப்புடன் விரைவில் தொடங்க வேண்டும். கடலோர பகுதிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுவதில் பல குளறுபடிகள் உள்ளன. ஒரு சிலர் மட்டும் குழுவில் உள்ளதால், அவர்கள் சார்ந்த கிராமங்களுக்கு மட்டுமே முன்னுரிமை  அளிக்கப்படுகிறது. பிற கடற்கரை கிராம மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடலோர மேலாண்மை குழுக்கள் முறையாக அமைக்கப்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுக சீரமைப்பு பணி என்ன நிலையில் உள்ளது. குளச்சல் முதல் மண்டைக்காடு புதூர் வரை  உள்ள ஏ.வி.எம் சானலை தூர்வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே  அதிகாரிகள் தந்து கொண்டிருக்கிறார்கள். பெரியகாடு மீனவர் கிராமத்தில்  போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு  நீட்டித்து தர வேண்டும்.

பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம்  கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும். கடலோர  கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி, வாக்காளர் எண்ணிக்கையை  முறைப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான  சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள்  அமைக்கப்பட வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் பதிலளித்து பேசியதாவது : அழிக்கால் மீனவ கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தற்போது குறுகிய நேர்கல் 4 எண்ணம் அமைக்கும் பணிகள் ரூ.10 கோடியில் நீர்வளத்துறையின் கடலரிப்பு கோட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று, குறுகிய நேர்கல் சுவர் தூண்டில் வளைவாக மாற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு அரசு ஒப்புதல் கிடைக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

 வாணியக்குடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு, வாணியக்குடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு வாணியக்குடியில் தள  ஆய்வு மேற்கொண்டு கடந்த 26.6.2022 அன்று துறைமுக பயனாளர்கள் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

 விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, துறைமுக பயனாளர்கள், துறை அதிகாரிகள், வடிவமைப்பு நிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் அரசின் ஒப்புதல் ஆணை பெற்று துறைமுக பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் மற்றும் மேம்பாடு செய்ய ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 27.7.2022 அன்று துறைமுக பயனாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தலைமை பொறியாளர் ஆலோசனைக்கு பின், வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

தேங்காப்பட்டணம் மணல் தூர்வாரும் இயந்திரத்தின் ஒரு பகுதியாக மணல் வெளியேற்றும் பைப், தேங்காப்பட்டணம் வந்து சேர்ந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் துறைமுக முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் அலை தடுப்பு சுவரை கடல் அலை அடிக்கும் தூரம் வரை 13.50 அடி ஆழத்துக்கு 633 மீட்டர் நீளம் வரையும் மற்றும் துறைமுக நுழைவு வாயிலை 150 மீட்டர் அகலத்துக்கும் அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் பிரேரனை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் முடிவடைந்த பின், விரிவாக்க பணிகள் தொடங்கும். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் ஏற்கனவே 2, 3 முறை போடப்பட்டு, இன்னும் ஒப்பந்தம் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கடற்கரை கிராமங்களில் வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்தவொரு முறையான உத்தரவும் இன்னும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வரப்பெற்றால் வாக்காளர் பட்டியல் மற்றும் வார்டுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவ பிரியா, சப் கலெக்டர் கவுசிக் மற்றும் மீன்வளத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீனவர்கள் தரப்பில் அலெக்சாண்டர், பெர்லின், எனல்ராஜ், விமல்ராஜ், ஜார்ஜ் ஆன்டணி, லைலா, ஜாண் அலோசியஸ், சர்ச்சிள், சகாய புனிதா, தாசன் உள்பட ஏராளமான மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரசு உத்தரவுப்படி மேலாண்மை குழு

கலெக்டர் அரவிந்த் பேசுகையில், கடற்கரை கிராமங்களில் அரசு ஆணைப்படி கடலோர மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். புதிய குழுக்கள் அமைக்கப்படும் வரை பழைய கமிட்டி செயல்படலாம்.  புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது அதிகாரிகள் கொடுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளை மீனவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

புற்றுநோய் சிகிச்சை மையம்

மீனவர் ஜார்ஜ் ஆன்றனி பேசுகையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் புற்று நோய் மையம் அமைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மருத்துவ அதிகாரி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புற்றுநோய் மையம் அமைக்க  கோரி ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு, பரிசீலனை செய்து நிதி ஒதுக்கீடு இது நாள் வரை வரவில்லை. ஒன்றிய, மாநில அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய புற்று நோய் மையம் அமைக்கப்படும் என்றார்.

Related Stories: