×

சத்தியமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11.77 கோடியில் புதிய பாலம்-விரைவில் பணி தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை தகவல்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11.77 கோடி செலவில் கூடுதலாக புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சத்தியமங்கலம் நகர் பகுதியின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. நகரின் இரு பகுதிகளை இணைக்கும் பவானி ஆற்று பாலம் மூலம் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் வழியாக தினந்தோறும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

மேலும் இப்பாலம் வழியாக அந்தியூர், பவானி, மேட்டூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே ஆர்ச் வடிவ பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில் குறுகலாக இருந்த பழைய பவானி ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 1987 ஆம் ஆண்டு பழைய ஆற்றுப் பாலத்தின் அருகே  புதிய பாலம் கட்டப்பட்டு அப்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பவானி ஆற்று பாலம் வலுவிழந்ததால் அப்பாலத்தின் வழியாக தற்போது வாகன போக்குவரத்து நடைபெறுவதில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பவானி ஆற்று பாலம் வழியாக தற்போது அதிகளவிலான வாகனங்கள் கடந்து செல்வதால் ஆற்று பாலம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  

இதைத்தொடர்ந்து பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பவானி ஆற்றுப்பாலத்திற்கு பதிலாக கூடுதலாக புதிய பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதன்படி புதிய பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு புதிய பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்ட அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. ரூ.11.77 கோடி செலவில் 6 தூண்கள் கொண்ட புதிய பாலம் 11 மீட்டர் அகலத்தில்  இரு வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்படவுள்ளது. தற்போது புதிய பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும்.  பாலம் கட்டுவதற்கான உடன்படிக்கை கையெழுத்தானவுடன் அதிலிருந்து 16 மாதங்களுக்குள் கட்டுமான பணி முடிக்கப்படும். புதிய பாலம் கட்டுமான பணி முடிந்த பின் சத்தியமங்கலத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தனர்.

பவானி ஆற்றின் குறுக்கே கூடுதலாக புதிய பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் சத்தியமங்கலம் நகர் பகுதி பொதுமக்கள் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பாராட்டு மற்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : National Highway Department ,Bhavani river ,Satyamangalam , Sathyamangalam: To reduce traffic congestion in Sathyamangalam, a new bridge will be constructed across Bhavani river at a cost of Rs.11.77 crore.
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து