ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜ ரூ.400 கோடி பேரம்; சாமியாருடன் டிஆர்எஸ் எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி வைரல்: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை ரூ.400 கோடிக்கு பாஜ பேரம் பேசிய விவகாரத்தில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாருடன் ஆளும் கட்சி எம்எல்ஏ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ, பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரை தனது கட்சிக்கு இழுக்க பாஜ பேரம் பேசியுள்ளது.ர் ஐதராபாத் மொய்னாபாத்தில் உள்ள அஜிஸ்நகரில் உள்ள பண்ணை வீட்டில் இதற்கான சந்திப்பு நடந்துள்ளது. இந்த பண்ணை வீடு எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டிக்கு சொந்தமானது.

இந்த பண்ணை வீட்டில் ஆளும் கட்சியின் 4 எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி வழங்குவதாக டெல்லியை சேர்ந்த ராமச்சந்திரபாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்தகிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜிலு ஆகியோர் பாஜ சார்பில் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதில்ராமச்சந்திரபாரதி, சிம்மயாஜிலு ஆகியோர் சாமியார்கள். நந்தகிஷோர் இடைத்தரகர். இதில் பேரம் பேச வந்தவர்களிடம் இருந்து ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆளும் எம்எல்ஏக்களுக்கு பாஜ பேரம் பேசியது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பு பண்ணை வீட்டின் உரிமையாளரான எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி, சுவாமி ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகிஷோர் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் விவரம் வருமாறு: எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி: நமஸ்தே சுவாமிஜி எப்படி இருக்கிறீர்கள்?

சுவாமி ராமச்சந்திர பாரதி: நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

ரோஹித்ரெட்டி: நான் நலமாக இருக்கிறேன். இப்போது பெயர் சொல்வது கடினம். இதுவரை இருவர் கட்சியில் சேர உறுதி அளித்துள்ளனர்.

சுவாமி ராமச்சந்திர பாரதி: நாம் ஒன்றாக பேசினால் நல்லது.

ரோஹித்ரெட்டி: தற்போது நாங்கள் மூவரும் தயாராக உள்ளோம். இந்த விஷயம் வெளியே வந்தால் எங்கள் பணி முடிந்துவிடும். முதல்வர் சந்திரசேகரராவ் பற்றி தெரியும் அல்லவா மிகவும் கோபமிக்கவர்.

சுவாமி ராமச்சந்திர பாரதி: நான் 24ம் தேதி வரை ஓய்வில் இருக்க வேண்டும். பிறகு ஐதராபாத் வருகிறேன். உட்கார்ந்து பேசலாம். 25ம் தேதி கிரகணம் இருப்பதால் அதன் பிறகு பார்க்கலாம். 26க்கு பிறகு எங்காவது சந்திப்போம். ஆனால், ஐதராபாத்தில் வேண்டாம்.

ரோஹித்ரெட்டி: இப்போது தேர்தல் நடைபெற உள்ளதால் அனைவரும் எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சந்திப்பிற்கு ஐதராபாத் நல்ல இடம்.

சுவாமி ராமச்சந்திர பாரதி: சரி, நான் ஐதராபாத்தில் எங்காவது வந்து சந்திக்கிறேன்.

எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி: சுவாமிஜி நேரில் சந்தித்தால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். மேலும், சிலரை கட்சி மாற்றம் செய்ய முயற்சி செய்கிறேன். தயவு செய்து இதையெல்லாம் ரகசியமாக வைத்திருங்கள். இல்லாவிட்டால் எனது கதை முடிந்து விடும்.

சுவாமி ராமச்சந்திர பாரதி: இது சிறிய விவகாரம். மத்தியில் முழு ஆதரவு இருக்கும். இடி முதல் ஐடி வரை உங்கள் பாதுகாப்பையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். நீங்கள் அனைவரும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள். எனவே, கவலைப்படாதீர்கள்.

இவ்வாறு, பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி கூறுகையில், ‘மாற்று கட்சிகளிலிருந்து பாஜவில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம். அவ்வாறு சேருபவர்களை நானே முன் நின்று கட்சியில் சேர்ப்பேன். மறைமுகமாக அல்லது இடைத்தரகரை வைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் பாஜவுக்கு இல்லை.

டிஆர்எஸ்  எம்எல்ஏக்களை விலை பேசுவதற்காக இடைத்தரகராக இருந்ததாக கூறும் சுவாமிஜிக்கும் பாஜவுக்கும் தொடர்பே இல்லை. அரசியல் இடைத்தரகராக உள்ள நந்தகுமார் எனக்கு நெருங்கிய உறவினர் என பரப்பப்பட்டு வருகிறது. எனது பகுதியில் அவரது ஓட்டல் உள்ளது. பாஜ மூத்த தலைவராகவும், ஒன்றிய அமைச்சராகவும் உள்ள நான், தினந்தோறும் ஆயிரம் பேருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு நெருங்கியவர்கள் ஆவார்களா? இந்த பேரம் தொடர்பாக துணிவிருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட டிஆர்எஸ் அரசு தயாரா?,’ என தெரிவித்தார்.

பேரம் பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை: எம்எல்ஏ பைலட் ரோகித்ரெட்டி பண்ணை வீட்டில் நடைபெற்ற பேரத்தின்போது கைது செய்யப்பட்ட டெல்லியை சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாத்தை சேர்ந்த நந்தகிஷோர், திருப்பதியை சேர்ந்த சிம்ஹயாசுலு ஆகியோரை ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை நீதிபதி முன்பு நேற்று முன்தினம் இரவு சைபராபாத் போலீசார் ஆஜர்படுத்தினர். ஆனால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பேரம் பேசப்பட்டதாக எவ்வித பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக கூறி அவர்கள் 3 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

போலீசார் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு: கைதான 3 பேருக்கும் 41 சி பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கிய பின்னர் விசாரணைக்கு அழைக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து சைபராபாத் போலீசார் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில், 3 பேரையும் கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல், பாஜ சார்பில் எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணைக்கு நடத்தவோ அல்லது சிபிஐ விசாரணை நடத்தவோ உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. தொடர்ந்து, 3 பேரும் ஐதராபாத்தை விட்டு வெளியே போகக்கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட 4 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: