நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.195 கோடி மானியம்: முதல்வருக்கு ஊழியர்கள் சங்கம் நன்றி

சென்னை: நியாய விலைக்கடை நடத்தும்  கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.195 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வருக்கு ஊழியர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சு.வெங்கடாசலபதி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் 32 ஆயிரத்திற்கு மேற்பட்ட நியாய விலை கடைகளை நடத்தி வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம், பணிக்கால பயன்கள், கடை வாடகை, லாரி வாடகை போன்ற செலவினங்களுக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளரின் பரிந்துரையின்படி நியாயவிலை கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு 2020-21 ஆண்டிற்கு ரூ.460 கோடி அரசு வழங்க வேண்டும். அதன்படி ரூ.150 கோடி வழங்கப்பட்டது. மீதி ரூ.310 கோடி வழங்க வேண்டியிருந்தது. அரசு இந்த மானியத்தை வழங்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கால பயன்கள் தொய்வின்றி வழங்க ஏதுவாக தற்போது ரூ.195 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: