எப்ஐஆர் பதிவு செய்வது ஆரம்ப கட்டம்தான் வழக்கை ரத்து செய்ய கோர முடியாது: எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் அரசு தரப்பு வாதம்

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கையும், சொத்து குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் நேற்று 2வது நாளாக விசாரணைக்கு வந்தது.  அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜு மற்றும் சித்தார்த் தவே ஆகியோர், தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்தாலும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறவினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும் வேலுமணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உறவினரின் பணத்தை வேலுமணியின் பணம் எனக் கூற முடியாது. 2016ல் வேலுமணிக்கு 3 கோடி ரூபாய் சொத்து இருந்தது. 2021ல் அது 3.3 கோடி ரூபாயாக இருந்தது.  வருமானத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்ட முடியாவிட்டால் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிய முடியும். இந்த வழக்கில் வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காத நிலையில் வழக்குப்பதிந்தது செல்லாது என்று வாதிட்டனர்.

இதை தொடர்ந்து வழக்கில் புகார்தாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் அடிப்படையில் மட்டுமே, உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுவதை ஏற்க முடியாது. அது சரியான காரணம் அல்ல. புலன் விசாரணை அதிகாரியின் விசாரணை முடிவின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது சிஏஜி அறிக்கை வெளியானது.

அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த அறிக்கை குறித்து விசாரிக்கப்பட்டது. டெண்டர் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியலை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்ப கட்டம்தான். ஆரம்ப கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது என்று வாதிட்டார். வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன் வைப்பதற்காக விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: