×

மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த விவகாரம் 10 நாட்கள் பின்தொடர்ந்து திட்டமிட்டு கொன்றேன்: சிபிசிஐடி போலீசாரிடம் காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: என்னை காதலித்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், திட்டமிட்டு 10 நாட்கள் பின்தொடர்ந்து சென்று ரயில் முன்பு தள்ளி சத்யாவை கொலை செய்தேன் என்று காதலன் சதீஷ் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சத்யா (20), கடந்த 13ம் தேதி மதியம் தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து வந்த காதலன் சதீஷ், தன்னை காதலிக்க வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சத்யாவை, அப்போது கடற்கரை நோக்கி வந்த ரயில் முன்பு சதீஷ் தள்ளி கொடூரமாக கொலை செய்தார்.

இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சதீஷை அதிரடியாக கைது செய்தனர். பிறகு 28ம் தேதி (நேற்று) வரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பல்வேறு குழப்பங்கள் நீடித்ததால், ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், செய்திதாள்களுக்கு தகவல் கொடுத்த நபர்கள் மற்றும் யூ-டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் சிறையில் உள்ள சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றம், குற்றவாளி சதீஷை ஒரு நாள் காவலில் விசாரிக்க நடத்த அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து காதலன் சதீஷை கடந்த 26ம் தேதி புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சிபிசிஐடி போலீசார் இரவோடு இரவாக பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு சதீஷை அழைத்து வந்து மாணவியை கொலை செய்தது எப்படி என்று விசாரணை நடத்தினர். மேலும், மாணவியை ரயில் முன்பு தள்ளியது எப்படி என்றும் சதீஷ் சிபிசிஐடி போலீசாரிடம் நடித்துக் காட்டினார். அதை சிபிசிஐடி போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

பிறகு சதீஷிடம் நடத்திய விசாரணையில், ‘என்னை 2 ஆண்டுகள் காதலித்ததுடன் பல இடங்களில் சுற்றி விட்டு, பெற்றோர் கூறியதால் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால், நான் திட்டமிட்டு 10 நாட்கள் பின்தொடர்ந்து சென்று சத்யாவை கொலை ெசய்தேன். சம்பவத்தன்று நான் கொலை செய்யும் நோக்கில்தான் வந்தேன். இருந்தாலும், கடைசியாக ஒரு வாய்ப்பு சத்யாவுக்கு அளிக்க விரும்பினேன். அதனால், அன்று எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறி சத்யாவிடம் அரைமணி நேரம் மன்றாடினேன். ஆனால் அவர், உதாசீனப்படுத்தினார். பிறகு நான் ஏற்கனவே திட்டமிட்டபடி ரயில், நிலையத்திற்குள் வரும் போது, சத்யாவை தள்ளி கொலை செய்தேன்’. இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஒருநாள் காவல் முடிந்து நேற்று முன்தினம் இரவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீசார் மீண்டும் சதீஷை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Satya ,Satish ,CBCID , The case of student Satya being pushed to death in a train was followed for 10 days and she was killed: boyfriend Satish gave sensational confession to CBCID police
× RELATED அண்ணாமலை மீதான விதிமீறல் புகார்...