×

கோவை கார் சிலிண்டர் வெடித்து விபத்து எப்ஐஆர் பதிந்தது என்ஐஏ: 109 அபாயகரமான பொருட்கள் பறிமுதல் என தகவல்; பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வருமாறு: கடந்த 23ம் தேதி இரவு கோவை உக்கடம், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உடல் முழுவதும் தீயில் கருகி பலியானார். மேலும், சங்கமேஸ்வரர் கோயில் பெயர் பலகை மற்றும் கோயில் முன்பு இருந்த கடையிலும் சேதம் ஏற்பட்டது. விசாரணையில் காரின் உரிமையாளர் கோவை உக்கடம் கோட்டைமேடு எச்எம்பிகே தெருவை சேர்ந்த ஜமேசா முபின் என்று தெரியவந்துள்ளது.

உக்கடம் போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்  நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் குருக்கள் சுந்தரேசன் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில், காரின் உரிமையாளர் ஜமேசா முபின் வீட்டில் நடந்த சோதனையில் பொட்டாசியம் நைட்ரேட், கருப்பு பவுடர், தீப்பெட்டி, வெடிக்க வைப்பதற்கான 2 மீட்டர் பியூஸ், நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர், அலுமினியம் பவுடர், ஒஎஸ்ஒய் 99 தடிமனுள்ள ஆக்சிஜன் சிலிண்டர், சல்பர் பவுடர், சர்சிகல் பிளேட், கிளாஸ் மார்பிள், 9 வால்ட் பேட்டரி, 9 வால்ட் பேட்டரி கிளிப், வயர், இரும்பு ஆணிகள், சுவிட்ச், இன்டேன் காஸ் சிலிண்டர், காஸ் ரெகுலேட்டர், இன்சுலின் டேப், கையுறைகள், ஜிகாத் குறித்த இஸ்லாமிய கோட்பாடுகள் எழுதப்பட்ட நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட 109 பொருட்கள்  கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, உக்கடம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு அக்டோபர் 27ம் தேதி மதியம் ஒரு மணிக்கு மத்திய உள்துறையிலிருந்து உத்தரவு வந்தது.  தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008ன் கீழ் ஒன்றிய அரசின் ஒப்புதலின் அடிப்படையில் கடுமையான குற்றத்தின் தன்மை குறித்தும் இதனால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவையாக உள்ளது.

எனவே, தேசிய புலனாய்வு முகமை சட்டம் பிரிவு 6 (5) மற்றும் 8ன்கீழ் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் இன்ஸ்பெக்டர் எஸ்.விக்னேஷ் சம்பவம் குறித்து சந்தேக மரணம், மற்றும் வெடிபொருள் தடை சட்டம் பிரிவு 3 (ஏ)ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்வாறு தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இனி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்.

Tags : Coimbatore ,FIR ,NIA ,Poontamalli Special Court , Coimbatore car cylinder explosion accident FIR lodged NIA: 109 hazardous materials confiscated; Case trial at Poontamalli Special Court
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்