×

கீழ்ப்பாக்கத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக வந்து காதலர்களான பட்டதாரிகள் மகேந்திரன் - தீபா திருமணம்: மனநல காப்பகத்தில் நடந்தது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு மனநோயாளிகளாக வந்து காதலர்களாக மாறிய பட்டதாரிகள் மகேந்திரன்-தீபா திருமணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்தி வைத்து வாழ்த்தினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப தகராறில் சென்னையை சேர்ந்த மகேந்திரன், வேலூரை சேர்ந்த தீபா ஆகியோர் அனுமதிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். இருவரும் மனநல காப்பகத்திலேயே இருந்து வேலை செய்து வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து, மகேந்திரன் - தீபா திருமணம் நேற்று மனநல காப்பகத்தில் நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது: தினந்தோறும் ஆறேழு திருமணங்களுக்கு செல்வேன், இதுவரை மிகவும் மகிழ்வுடன் கலந்து கொண்ட திருமணம், நரிக்குறவ மக்களின் திருமண நிகழ்வு. அதற்கடுத்து இந்த கல்யாணம் தான்.  இந்த திருமணத்தில் நான் கலந்துகொண்டது என் வாழ்நாளின் அரும்பெரும் பேறுகளில் ஒன்று. திருமண விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றி இந்த திருமணம் நடந்துள்ளது. மேலும், அழையா விருந்தாளியாக இந்த திருமணத்திற்கு நான் வந்து இருக்கிறேன்.  

நிதிநிலை அறிக்கையில் இருந்து ரூ.40 கோடி இந்த மருத்துவமனையின் கட்டமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் விவசாயம் செய்வதுடன், பேக்கரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதேபோல தற்பொழுது காலியாக இருக்கக்கூடிய இடங்களில் நெல் பயிரிட்டு உள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு,  எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏ வெற்றி அழகன், மனநல காப்பக இயக்குனர் பூர்ணசந்திரிகா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

* மனநல காப்பகத்தில் இருவருக்கும் வேலை
திருமணம் நடந்த மகேந்திரன் மற்றும் தீபா 2 பேரும் பட்டதாரிகள். அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று வில்லிவாக்கம் எம்எல்ஏ வெற்றிஅழகன் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலேயே 2 பேருக்கும் மேற்பார்வையாளராக பணி வழங்கி, அதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், மணமகன் மகேந்திரன் - மணமகள் தீபா பேசுகையில், ‘எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருந்தால் கூட இப்படி நடத்தி வைத்திருக்க மாட்டார்கள். எங்கள் திருமணம் நடந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேலைவாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி’’ என்றனர்.

Tags : Mahendran - Deepa ,Kilpauk ,Minister ,Subramanian , Graduates Mahendran - Deepa, lovers who came to Kilpauk as mentally ill, married: took place in mental asylum; Greetings from Minister Subramanian
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...