பி.டி.உஷாவின் பயிற்சி விடுதியில் பெண் தடகள பயிற்சியாளர் தற்கொலை: கோவையை சேர்ந்தவர்

திருவனந்தபுரம்: கேரளாவில் பி.டி.உஷா தடகள பயிற்சிப் பள்ளியில் பணி புரிந்து வந்த கோவையை சேர்ந்த பெண் பயிற்சியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே பாலுசேரி பகுதியில் பிரபல முன்னாள் தடகள வீராங்கனை, பி.டி. உஷா தனது பெயரில் தடகள பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று  வருகின்றனர். இவர்கள் தங்குவதற்காக பயிற்சி பள்ளி வளாகத்திலேயே ஒரு விடுதியும் உள்ளது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஜெயந்தி (27) என்பவர் கடந்த வருடம் இங்கு பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். அவர் விடுதியிலுள்ள அறையில் தங்கி இருந்தார். இதற்கிடையே, நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஜெயந்தி தனது அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். போலீசார் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: