திருப்பதியில் 1ம் தேதி முதல் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்

திருமலை: திருப்பதியில் டிசம்பர் 1ம் தேதி விஐபி தரிசன நேரம் மாற்றப்பட உள்ளது. திருமலை அன்னமையா பவனில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று அளித்த பேட்டி வருமாறு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தாண்டு ஏப்ரல் 12ம் தேதி வரை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கான நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் வழங்கும் முறையை நிறுத்தியது. பல பக்தர்கள் தொடர்ந்து மீண்டும் நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டனர். இதையடுத்து, அறங்காவலர் குழு கூட்டத்தில் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் ரயில் நிலைய பின்புறம் உள்ள 2வது சத்திரம் ஆகிய இடங்களில் இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் நவம்பர் 1ம் தேதி முதல் வழங்கப்படும். தினமும் டிக்கெட் உள்ள வரை வழங்கப்படும்.

சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் முதல் 25 ஆயிரமும், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 15 ஆயிரம் டிக்கெட்டும் வழங்கப்படும். நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும்  பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் சோதனை அடிப்படையில் விஐபி தரிசன நேரத்தை டிசம்பர் 1ம் தேதி முதல் காலை 8 மணி முதல் மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதனால், இலவச தரிசன டிக்கெட் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நேரம் மற்றும் திருமலையில் அறைகளுக்கான அழுத்தம் குறையும். ஆன்லைன், ஆப்லைனில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் தங்குமிடம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: