பறவை காய்ச்சலை தொடர்ந்து கேரளாவில் ஆப்ரிக்க காய்ச்சல்: ஒன்றிய சுகாதார குழு வருகை

திருவனந்தபுரம்:  கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பன்றிகளுக்கு ஆப்ரிக்க காய்ச்சல் பரவி வருவது மேலும் பீதியை  அதிகரித்து இருக்கிறது. கேரள  மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் அதிகளவில்  வளர்க்கப்படுகின்றன. இங்கு 100க்கும்  மேற்பட்ட வாத்துப் பண்ணைகளும் உள்ளன. இங்கு இருந்துதான் வாத்துகள்,  முட்டைகள் பல்வேறு பகுதிகள், தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி  வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகே  உள்ள வழுதானம் பகுதியில் உள்ள  பண்ணைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாத்துகள் திடீரென இறந்தன. இதையடுத்து, வாத்து பண்ணைகளில் பரிசோதனைகள்  நடந்தன. அப்போது அவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது. இதை  தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட வாத்துகளை கொல்ல  முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 ஆயிரத்து 695  வாத்துகள் கொல்லப்பட்டன. நேற்றும் வாத்துகளை கொல்லும் பணி நடைபெற்றது. பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை தொடர்ந்து நோய் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கோட்டயம் பகுதிகளில் பன்றிகளுக்கு ஆப்ரிக்க காய்ச்சல் பரவி வருவது  தெரிய வந்துள்ளது. சில தினங்களாக இங்குள்ள மீனச்சல் பகுதியில் உள்ள  பண்ணைகளில் பன்றிகள் இறந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் இது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மீனச்சல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர்  சுற்றளவிற்கு பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பன்றிகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு  உள்ளது.

 

இதற்கிடையே, பறவைக் காய்ச்சல்  பாதிக்கப்பட்டு உள்ள ஆலப்புழாவுக்கு குழுவை அனுப்ப ஒன்றிய சுகாதாரத் துறை  உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஒன்றிய சுகாதாரத் துறையின் பெங்களூரு  பிராந்திய அலுவலகத்தில் உள்ள டாக்டர்கள் ராஜேஷ் கேதாமணி தலைமையிலான 7 பேர்  அடங்கிய குழு கேரளாவுக்கு விரைந்து உள்ளது. இந்த குழு நோய் பாதிக்கப்பட்ட  பகுதிகளுக்கு சென்று  ஆய்வு நடத்தி ஒன்றிய அரசுக்கு அறிக்கை தாக்கல்  செய்யும்.

Related Stories: