வியன்னா ஓபன் டென்னிஸ்: மெட்வடேவ் காலிறுதிக்கு தகுதி

வியன்னா: வியன்னா ஓபன் டென்னிஸில்  ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி,  ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் டேனில் மெட்வடேவும், மண்ணின் மைந்தர் டொமினிக் தீமும் மோதினர். இப்போட்டியில் மெட்வடேவ் 6-3, 6-3 என நேர் செட்களில் வெற்றி பெற்றார். எனினும் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள் வரை நீடித்தது.  இருவரும் பந்தை சரியான இடங்களில் பிளேஸ் செய்து மாறி, மாறி அடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் அதிக நேரம் பிடித்தது.

வெற்றி பெற்ற பின்னர் மெட்வடேவ் கூறுகையில், ‘‘தீம் சளைக்காமல் போராடினார். அவருக்கு இது சொந்த மைதானம் என்பதால், எளிதில் என்னால் பாயின்ட்டுகளை எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு புள்ளிக்காகவும் போராட வேண்டியிருந்தது’’ என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் மெட்வடேவ், காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் ஜான்னிக் சின்னரை எதிர்கொள்கிறார்.

Related Stories: