
ஊட்டி: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 234/77 திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊட்டியில் உள்ள பிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்ற அவர், மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர், களத்திற்கு நேரடியாக செல்லுங்கள்.
உங்கள் துறைகளில் என்ன நடக்கிறது என்பதை நேரில் சென்று பார்த்தால் மட்டுமே தீர்வு காண முடியும். என்ன தேவைகள் உள்ளது என்பது அப்போதுதான் தெரியும். 234/77 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில், 77 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தற்போது 17வது தொகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, குன்னூர் தொகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார். மேலும், இந்த நிதி முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது துறை அமைச்சரான எனது பணி. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டால், அவர்களுக்கு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், தேவையில்லாத இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படவுள்ளது. டிஆர்பி, மூலம் ஆசிரியர்கள் தேர்வு மேற்கொள்ளப்படும். தற்போது 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில், ஆசிரியர்கள் கலந்தாய்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அன்பில் மகேஷ் கூறினார்.