×

குமரியில் எந்திரங்கள் உதவியுடன் கும்பப்பூ சாகுபடி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கூலி அதிகரிப்பு காரணமாக நடவு எந்திரம் கொண்டு விவசாயிகள்  கும்பப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என்று இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ அறுவடை முடிந்து கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது. பறக்கை, சுசீந்திரம், தேரூர் உள்பட பல்வேறு இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு நடவு பணி முடிந்துவிட்டது. தற்போது தோவாளை சானல், அனந்தனார் சானல் உள்ளிட்ட கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி நடந்து வருகிறது.

நெல் சாகுபடி செய்யும்போது பெண் தொழிலாளர்களை கொண்டு நாற்று நடப்படும். தற்போது வேலை ஆட்கள் குறைவு மற்றும் கூலி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விவசாயிகள் மாற்று முறையாக நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தொழிவிதைப்பு, பொடிவிதைப்பு, எந்திரம் கொண்டு நடவு செய்யும் முறை பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் வேலை ஆட்கள் தேவையில்லை. மேலும் கூலியும் அதிகம் ஆகாது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. கும்ப ப்பூ சாகுபடி தற்போது நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த சாகுபடி நடக்கும். அணைகளில் தற்போது தண்ணீர் போதிய அளவு உள்ளது. கடந்த காலங்களில் நடவு செய்வதற்கு வேலை ஆட்கள் அதிகமாக கிடைத்தனர். அவர்களுக்கு கூலியும் குறைவாக இருந்தது. தற்போது வேலைஆட்கள் பற்றாக்குறையுடன், கூலியும் அதிமாக உள்ளது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல்களில் நடவு செய்வதற்கு ரூ.5 ஆயிரம் கூலியாக செலவு செய்யவேண்டியுள்ளது. அதனுடன் நடவு செய்யும்போது அடிஉரமும் போடவேண்டும். ஆனால் தொழில்விதைப்பு, பொடிவிதைப்புக்கு இந்த உரம் போடதேவையில்லை. மேலும் தொழிவிதைப்பு, பொடிவிதைப்பின்போது வயலில் உரிமையாளரே நெல்களை வயல்களில் வீசியும், நெல் விதைக்கும் எந்திரம் கொண்டும் நடவு பணியை முடித்துவிடலாம். இதனால் கூலி மிச்சமாகும்.

இதனை தவிர நடவு எந்திரம்கொண்டு நாற்றும் பல விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். இதற்காக நாற்றங்கால் அமைத்து, நாற்று ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்தவுடன், வயல்களில் எந்திரம் கொண்டு நடவு செய்கின்றனர். இதனால் கூலிமிச்சம் ஆவதுடன், நடவும் நேர்கோட்டில் இருக்கும். இந்த நடவு மூலம் மகசூலும் அதிகமாக கிடைக்கும் என்றார்.

Tags : Kumari , Watermelon Cultivation in Kumari with the help of machines
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...