சேதுபாவாசத்திரம் அருகே கடலில் விடப்பட்ட 3.2 மில்லியன் பச்சை ரக இறால் குஞ்சுகள்

பேராவூரணி: மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் பச்சை ரக இறால் குஞ்சுகளை, பொறிப்பகங்களில் வளர்த்து கடலில் விடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்யப்படுகிறது.

அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதி உதவியுடன், தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை ரக இறால் குஞ்சுகளை பொறிப்பகங்களில் வளர்த்து கடலில் விடுதல் என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ரூ. 168.948 லட்சம் மதிப்பீட்டில் 200 மில்லியன் பச்சை ரக இறால் குஞ்சுகள் தமிழகத்தின் கடல் பகுதிகளில் விடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக நேற்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடல் பகுதியில் 3.2 மில்லியன் பச்சை ரக இறால் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், மீனவர் நலத்துறையை சேர்ந்த பாலாஜி, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ்மணி, தமிழ் மாநில மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜுதீன் மற்றும் மீன்வள துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

22. 64 மில்லியன் பச்சை ரக இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் விடப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானிகள் ஜான்சன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: