×

கேட்டதோ 22%..கொடுப்பதோ 19%: அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 19% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல்.. விவசாயிகள் கண்டனம்..!!

டெல்லி: அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 19 சதவீத ஈரப்பதமான நெல்லை கொள்முதல் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்கவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு, நெல் ஈரப்பத அளவை உயர்த்திட அனுமதி கேட்டது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்த இந்திய உணவு கழக தர கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர் கான் தலைமையிலான குழு, நெல்லை ஆய்வகத்தில் பரிசோதித்து ஒன்றிய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், நெல் கொள்முதலை 19 சதவீதம் வரை உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள 19 சதவீதம் போதாது என்று தெரிவித்துள்ள விவசாயிகள், கோரிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் ஏற்க மறுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

24 சதவீத ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்ட நிலையில், 22 சதவீத ஈரப்பத நெல்லையாவது கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை சுட்டிக்காட்டிய விவசாயிகள், ஒன்றிய அரசு மென்மேலும் வஞ்சிக்காமல் 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 


Tags : Union Govt ,Govt , 19% Moisture, Paddy Procurement, United Govt
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...