ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது; இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். உரிய அனுமதியுடன் ஆழ்கடலில்  மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தொடர்கதையாகி விட்டன. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு முழுஆதரவு தெரிவிக்கிறோம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதே, இதுபோன்ற அட்டகாசங்கள் தொடர்வதற்கு முக்கியக் காரணமாகும். இனியும் மௌனமாக இருக்காமல், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசும் உரிய அழுத்தம் தர வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: