ரயிலில் வங்கி பெண் மேலாளரை கட்டி பிடித்து சில்மிஷம்: நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாலை 6.35க்கு, பாசஞ்சர் ரயில் புறப்பட்டு செல்கிறது. நாகர்கோவில் டவுன், ஆளூர், இரணியல், பள்ளியாடி, குழித்துறை, குழித்துறை மேற்கு, பாறசாலை, தனுவச்சபுரம், அமரவிளை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், நேமம் வழியாக சென்று இரவு 8.25க்கு திருவனந்தபுரத்தை இந்த ரயில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மாலையில் அரசு மற்றும் தனியார் அலுவலகம் முடிந்து குமரி மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகள் முடிந்து செல்லும் மாணவ, மாணவிகள் என ஏராளமானவர்கள் இந்த ரயிலில் பயணிப்பார்கள். குறிப்பாக பணிக்கு வந்து செல்லும் பெண்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இதற்காகவே இந்த ரயிலில் பெண்களுக்காக இரு பெட்டிகள் தனியாக உள்ளன. ஆனால் மகளிருக்கான ரயில் பெட்டியில் ஆண்களும் பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது. காதலர்கள், கள்ளக்காதல் ஜோடிகள் இந்த ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டு பெண்கள் இருப்பதை பற்றி கவலைப்படாமல் சில்மிஷ லீலைகளை செய்வார்கள். போதை கும்பல், திருட்டு கும்பல்களும் ஏறி பெண்களிடம் கைவரிசை காட்டி உள்ளனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டதுடன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் வழியாக தற்போது இயக்கப்படுகிறது.

இந்த இரு ரயில்களின் மாற்றம் காரணமாக மாலை 6.35க்கு புறப்பட்டு சென்ற நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் தற்போது மாலை 6.45 க்கு தான் புறப்படுகிறது. இதனால் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள், இளம்பெண்கள் வீடு செல்ல இரவு 8 மணிக்கு மேல் ஆகிறது.

இந்த பயணிகள் ரயில் பிளாட்பாரம் 1 ஏ வில் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கு போதிய வெளிச்சமும் இல்லாத நிலையில் ரயில் பெட்டிகளில் ஏறி அமர்ந்து இருக்கும் பெண்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்த பயணிகள் ரயிலில் மகளிருக்கான பெட்டியில், வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் பயணித்தார்.

மற்ற பயணிகள் வருவதற்கு முன்பு இவர் வந்து விட்டதால் ரயில் பெட்டியில் தனியாக அமர்ந்து இருந்தார். அந்த சமயத்தில் ரயில் பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென வங்கி பெண் மேலாளரை கட்டி பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார். அவர் அலறிக்கொண்டு, அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தார். சக பயணிகள் வருவதற்குள் அந்த வாலிபர் மாயமாகி விட்டார். அந்த வாலிபர் அடிக்கடி பெண்கள் இருக்கும் பெட்டியில் ஏறி, தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறுவதாக கூறப்படுகிறது. கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த அந்த வாலிபர் மீது பலமுறை ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பயணிகள் கூறினர். இந்த சம்பவத்தால் நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: