×

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பேரிடர் கால பாதிப்பு இடங்கள்-வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன என வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தெரிவித்தார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தலைமை வகிக்க,கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார், டிஆர்ஓ லதா, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சேவைகள், சாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, பட்டா மாறுதல், இணைப்பு பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள், முதல்வரின் முகவரி, உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், மாவட்ட திட்ட பணிகள், திட்ட முன்வடிவம் அனுப்பப்பட்டுள்ள திட்டங்கள், பணியாளர்கள் விபரம், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொண்ட விபரம், கிராம உதவியாளர்கள் நியமனம் உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுபேரிடர் பாதிப்புஇடங்கள் 84தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:
2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடும்.

இப்பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய கனமழையினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மேற்படி இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும்

வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும்
அவசர கால திட்டம் தயாரித்து வைத்திருக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைத்து செயல்பட வேண்டும்.

தேவையான நபர்களுக்கு போதிய பயிற்சி அளித்திட வேண்டும். காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 7 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து திட்டம், மீட்புக்குழு ஏற்படுத்திட வேண்டும்.தீயணைப்பு துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள், தீ விபத்துகளின் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்த வேண்டும்.

முகாம்களுக்கு ேபாதிய வசதிகள் கட்டாயம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்பு பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவை படகுகள், ரப்பர் டிங்கிகள் ஆகியனவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று வியாதிகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அரசு- தனியார் மருத்துமனைகளுக்கும் மருத்துவமனை பாதுகாப்பு திட்ட கையேடு தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். மீட்புப்பணி முகாம்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் கழிவறை உள்ளிட்ட இதர வசதிகள் செய்யப்பட வேண்டும்.

உடைப்பு ஏற்பட்டால் உடனே அடையுங்கள்

அனைத்து அணைகளின் மதகுகள் திறந்து மூடும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அணைக்கட்டு பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி 24 மணிநேரமும் நீர்வரத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி வசதி, கம்பியில்லா செய்தி வசதி செய்யப்பட வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது வழியோர கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படகுகள், கட்டுமரம், படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுக்கு இலவச ெதாலைபேசி

அனைத்து துறை மாவட்ட அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், துறை சார்ந்த, துறையின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் TN SMART Mobile appஐ அவர்களது செல்லிடைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் அனைத்து துறையினரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவில் 24 மணிநேரத்திலும் பணியாளர்கள் வயர்லெஸ் மூலம் இயற்கை இடர்பாடுகளின் போது உடனடி தகவல்களை பெற்று தடுப்பு- நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பிரிவில் 0451-1077 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து அவர், திண்டுக்கல் கோபாலசமுத்திரம் குளத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பெய்யும் மழைநீரை சேகரிக்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். இந்த ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரங்கராஜன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dindigul District ,Commissioner , Dindigul: 84 places in Dindigul district have been identified as disaster prone areas
× RELATED ஜிப்மர் மருத்துவர் தற்கொலை முயற்சி- பரபரப்பு