சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தலைமையில் நேற்று அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் மற்றும் சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தற்சமயம் சுமார் 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 1065 கி.மீட்டரில் சுமார் 1033 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகள் முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது.  

இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்து பணிகளும் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளது.  மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் திரு.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் செயலாளர், திரு. பிரசாந்த் மு வடநரே, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர், திரு. கு.இராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் திரு. பொ.முத்துச்சாமி, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர், திரு. எஸ். ராமமூர்த்தி மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: