சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்-கிராம மக்கள் மறியல்; போலீஸ் குவிப்பு

திருத்துறைப்பூண்டி : சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி திருத்துறைப்பூண்டி அருகே நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள்அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு ஏரி, கண்ணன் மேடு பகுதியில் நீர்நிலை புறம்போக்கு உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கண்ணன்மேடு பகுதியை சேர்ந்த மாதவராமன் என்பவர் தலைக்காடு ஏரி, கண்ணன்மேடு, அன்பிலார் வடிகால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தலைக்காடு கண்ணன்மேடு பகுதியில் நீர்நிலை புறம்போக்கிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாலர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றாததை தொடர்ந்து ஆக்கிரப்பு அகற்றப்பட்டு வருகிறது.

நேற்று 4வது முறையாக ஆக்கிரப்பு அகற்ற சென்றபோது வழியில் பாதிக்கபட்டவர்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர். அவர்களிடம் ஆர்டிஓ கீர்த்தனாமணி, தாசில்தார் மலர்க்கொடி, டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஆகவில்லை. இதனால் மறியலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டவர்களை போலீஸ்சார் கைது செய்தனர். பின்னர் ஆர்டிஓ கீர்த்தனாமணி தலைமையில் வருவாய்துறை, மற்றும் பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த வீடுகள் பெக்லைன் மூலம் அகற்ற சென்றனர். அப்போது, எம்எல்ஏ மாரிமுத்து தர்ணாவில் ஈடுப்பட்டார். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக தீயனைப்பு வாகனமும், 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

Related Stories: