×

உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் உலக தரத்தில் மின்னுவதற்கு தயாராகும் பறவைகள் சரணாலயம்-திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராம்சர் ஈரநில அங்கீகாரம்

முத்துப்பேட்டை : திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சர் ஈரநில அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால் அனைத்து அடிப்படை வசதிகளுடன் சரணாலயம் உலக தரத்தில் மின்ன தயாராகி வருகிறது.தமிழகத்தில் உள்ள இயற்கை பறவை சரணாலயங்கள் பல உள்ளன. இதில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட சரணாலயங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் தொடங்கி சென்னை பழவேற்காடு மற்றும் வேடந்தாங்கல், மதுராந்தகம் அருகே கரிக்கிலி, அரியலூர் அருகே காரைவெட்டி, ராமநாதபுரம் அருகே சித்திரங்குடி, மேல்கீழ் செல்வனூர், கஞ்சிரங்குளம், திருநெல்வேலி அருகே கூந்தன்குளம், ஈரோடு அருகே வெள்ளோடு, சிவகங்கை அருகே வேட்டங்குடி, நாகை அருகே கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பறவை சரணாலயங்கள் முக்கியமானதாகும்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் சுமார் 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியில் உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த சரணாலயத்தை வனத்துறை கட்டுபாட்டில் பராமரித்து வருகிறது. வருடத்தில் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் இங்கு பறவைகள் வரத்து அதிகமிருக்கும். மற்ற நாட்களிலும் உள்நாட்டு பறவையினங்கள் ஏரியில் சுற்றுலா பயணிகளை ரசிக்க வைக்கும் அளவில் கும்மாளத்துடன் கொட்டமடிக்கும். இதில் சாம்பல் நாரை, வெண் கொக்குகள், மயில்கால்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், மடையான், பாம்புதாரா, சிறுதலைவாத்து, நாமக்கோழி, பவளக்கால் உல்லான், நாராயணபட்சி, கருமூக்கி, வெண்கொக்கு, மயில்கள் உள்ளிட்ட பல்வேறு நூற்றுகணக்கான பறவையினங்கள் சரணாலய ஏரியில் காணபடுகின்றன.

அலையாத்திகாடுகளுக்கு வரும் பறவைகள் பலவும் உதயமார்த்தாண்டபுரம் சரணாலய பகுதிக்கும் வந்து தங்கி திரும்புவதுண்டு. இதில் இந்த சரணாலயத்தில் உள்ள ஏரிக்கரையோர மரங்கள், ஏரி நடுவே நடப்பட்டுள்ள பல்வகை பழரக மரங்களை பறவைகள் தங்குமிடமாக பயன்படுத்தி கூடுகட்டி வாழ்கிறது.

வருடத்தில் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் இங்கு பறவைகள் வரத்து அதிகமிருக்கும். பறவைகளின் புகலிடமாகமாகவும் உள்ள இந்த உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பற்றி பலமுறை தினகரனில் நாளிதழில் சிறப்பு செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகியது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் வரத்து இங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் உலக அளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்தி போகிறது. இந்நிலையில் இந்த பறவைகள் சரணாலயம் ராம்சர் ஈரநில அங்கீகாரத்தை பெற்றுள்ளதை கண்ட இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் இந்த பறவைகள் சரணாலயம் ராம்சர் ஈரநில அங்கீகாரத்தை பெற்றுள்ளதை கண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைந்து தமிழ்நாடு வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில்:உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 2002ம் ஆண்டு நடத்திய ஆய்வில் ராம்சர் ஈரநிலத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. தற்போது 20 ஆண்டுக்கு பிறகு தற்போது உலக அளவிலான ராம்சர் ஈரநில அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பிறகு காடு வளர்ப்பு, ஏரியில் படகு வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் அதேபோல் இந்த சரணாலயத்தை உலக தரத்தில் கொண்டு வரும் பல்வேறு பணிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எங்கள் வனத்துறை சார்பில் ஏற்கனவே பல்வேறு பணிகள் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நடைபெறுமானால் இந்த சரணாலயம் இப்பகுதிக்கு பெருமையை சேர்க்கும் என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளம் பக்கத்தில், கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தை பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப்போகிறது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

Tags : Udayamarthandapuram Village ,Dizhagam , Muthuppet: After the DMK came to power, the Udayamarthandapuram bird sanctuary was given Ramsar Wetland recognition.
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும்...