புதிய வாகன சட்டம் தீவிர அமல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

Erode: In Erode district, the police are actively in the process of imposing fines on motorists who violate traffic rules under the new Motor Vehicle Actஈடுபட்டனர்.

நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988ல், கடந்த 2019ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது.

இந்த புதிய வாகன சட்டத்தின் படி டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உட்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் முதல் நாள் என்பதால் பெரும்பாலான போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு மட்டும் ஏற்படுத்தினர். எனினும் சில இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 110 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதித்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் உடனடியாக வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று 2வது நாளாக போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், மாநகரில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, காளை மாட்டு சிலை சந்திப்பு, ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, கருங்கல்பாளையம், மூலப்பாளையம், கலெக்ட்ரேட் சந்திப்பு, பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். இதேபோல பவானி, பெருந்துறை, கோபி, சத்தி உட்பட மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் புதிய வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும் பணியை போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: