சத்தியமங்கலம் அருகே சாணியடி திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி வினோத திருவிழா கொண்டாடிய கிராம மக்கள்

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து வினோத வழிபாட்டில் ஈடுப்பட்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் நடப்பு ஆண்டிற்கான விழாவை ஒட்டி கிராம முழுக்க பசு மாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கழுத்தை மேல் உற்சவரை வைத்து உலர்வலமாக அழைத்து வந்த பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் பின்புறம் குவித்து வைக்கப்பட்ட சாணத்திற்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாணத்தை எடுத்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவிழா முடிந்த பின்னர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாணத்தை தங்களது விலை நிலங்களில் போடுவதற்காக எடுத்து சென்றனர். இதனை உரமாக இட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.  

Related Stories: