ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா ஏவுகணை சோதனை

வாஷிங்டன்: ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா நேற்று ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது. ரஷ்யா, சீனா நாடுகள் சமீப காலமாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரித்து பரிசோதித்து வருகின்றன. இதனால் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் மும்முரமாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைன் பகுதிகளில் கதிரியக்க ஆயுதங்கள் கொண்டு உக்ரைன் மிக மோசமான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அதே போல், அணுஆயுத கழிவுகளில் இருந்து தயாரான வெடிப்பொருள்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியது.

இதனிடையே, ரஷ்ய ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய அணுஆயுத போர் பயிற்சி ஒத்திகையை அதிபர் புடின் பார்வையிட்டார். இந்நிலையில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில், அதாவது மணிக்கு 6,200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்த, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை மேம்படுத்தும் 10க்கும் மேற்பட்ட சோதனைகளை அமெரிக்கா நேற்று நடத்தி உள்ளது.வெர்ஜினியாவில் உள்ள கடற்படை ஏவுதளத்தில் இருந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை மேம்படுத்த, தரவு மற்றும் தகவல்கள் தொடர்பான 11 சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Related Stories: