உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றை டிரோன் மூலம் படம் பிடித்த கர்நாடக வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி ஆகிய இடங்களை டிரோன் மூலம் படம் பிடித்த கர்நாடக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் மேலே நேற்று மதியம் ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உயர் நீதிமன்றம்  சுற்றி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது,  இளைஞர் ஒருவர் ஆளில்லா விமானத்தை பறக்க விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதில்,  அவர் பெயர் கிலரன்ஸ் எட்வர்ட் (31) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவை  சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு ட்ரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது டிரோன் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகத்தில் ஒரு பகுதி என பல முக்கிய தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: