பணிமனை ஓய்வறையில் டிரைவர், கண்டக்டர், தொழிலாளர்கள் புகை பிடிக்க, மது குடிக்க கூடாது: போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனைகளில் உள்ள ஓய்வறையில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது என போக்குவரத்து துறை ஊழியர்களை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அனைத்து கிளை, மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பணிமனையின் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவு வாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது, பணியாளர்களின் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக 5 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும்போது ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தினை இயக்கக்கூடாது.

பேருந்தினை பின்னோக்கி இயக்க வேண்டிய சூழலில் கண்டிப்பாக மற்றொரு பணியாளர் சிக்னலராக பணிசெய்ய வேண்டும். பணிமனைக்குள் ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறையில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை கூடாது. மீறுபவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிமனைக்குள் எந்த ஒரு பணியாளரும் வரக்கூடாது. பாதுகாவலர்கள் எந்த சூழ்நிலையிலும் மது அருந்திய பணியாளர்களை அனுமதிக்க கூடாது. மீறிச்செல்லும் பணியாளர்கள் மீது உடனடியாக பணியில் இருக்கும் மேற்பார்வையாளர், பாதுகாவலர் மற்றும் பணியில் உள்ள சக தொழிலாளர்களின் அடிப்படை புகார் பெற்று கிளை மேலாளரின் பரிந்துரையுடன் தலைமையகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பணியில் இருக்கும்போது கைப்பேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். பேருந்துகள் பணிமனையின் உள்ளே வரும்போது, ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் பேருந்தின் உள்ளே ஆய்வு செய்து, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களோ அல்லது வெடி பொருட்களோ இருப்பின் அவற்றை உரிய பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். தேவை ஏற்படின் அருகில் உள்ள காவல்துறை அல்லது தீயணைப்புத் துறையின் உதவியுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: