×

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நெகிழ்ச்சி சம்பவம் மனநோயாளிகளாக வந்து காதலர்களான பட்டதாரிகள்: திருமண வாழ்வில் நுழையும் தம்பதிக்கு பொதுமக்கள் வாழ்த்து

சென்னை: மனநல காப்பகத்துக்கு மன நோயாளிகளாக வந்த 2 பட்டதாரிகள் குணமடைந்து காதலர்களாக மாறி திருமணம் செய்து கொள்ளும் நெகிழ்ச்சி சம்பவம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரங்கேறியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகம் மற்றும் மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமையானது. கீழ்ப்பாக்கம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு இங்குள்ள மனநல காப்பகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேல் உள்நோயாளிகளாக உள்ளனர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த முதுநிலை பட்டதாரியான மகேந்திரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால், உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல், வேலூரை சேர்ந்த ஆசிரியரான தீபா என்பவர், தந்தை இறந்த சோகத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டது. அவரும், 2 ஆண்டுகளாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு மனநல காப்பக மருத்துவமனை இயக்குனர் பூர்ண சந்திரிகா கவுன்சலிங் மற்றும் மருந்து என சிறப்பான வகையில் சிகிச்சை அளித்தார்.

இதனால் மற்றவர்களை விட பட்டதாரிகளாக இருந்ததால் விரைவில் குணமடைந்தனர். எனினும், இவர்கள் மனநல காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே சர்வீஸ் செய்து வருகின்றனர். முதுநிலை பட்டதாரியான மகேந்திரன் அரசு மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகள் பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராகவும், தீபா அடுப்பகத்திலும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் மன நோயாளிகளாக வந்த அந்த முதல் சந்திப்பிலேயே மகேந்திரன்- தீபா ஆகியோருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டனர். இதனால், தீபா, மகேந்திரனிடம் காப்பகத்தில் அக்கறையுடன் நடந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே, மகேந்திரன் தன்னை கவனித்து வந்த தீபாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், முதலில் அதை நம்ப மறுத்த தீபா, பிறகு அதனை ஏற்றுக்கொண்டார். இது குறித்து விவகாரம் காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா கவனத்துக்கு சென்றது. உடனே இருவரையும் நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு, நாங்கள் மனநோயாளியாக இங்கு வந்தோம். தற்போது குணமடைந்து வாழ்க்கையை தொடங்க உள்ளோம். மன நோயாளிகளான எங்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள். என்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் மகேந்திரனை நான் விட்டு கொடுக்க முடியாது, அதேபோல், தன்னை தாய் உள்ளத்துடன் கவனித்துக் கொண்ட தீபாவை விட்டுக்கொடுக்க முடியாது என்று மகேந்திரனும் மனநல காப்பக இயக்குனரிடம் கூறினர்.

பிறகு மனநல காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகா, உங்களுக்கு நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று உறுதி அளித்தார். அதோடு இல்லாமல், 200 ஆண்டுகள் பழமையான கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பக மருத்துவமனையில் 2 நோயாளிகள் குணமடைந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முதல் நிகழ்வு இதுதான். எனவே, இருவரின் திருமணத்தை மனநல காப்பகமே சிறப்பாக நடத்துகிறது. மனநல காப்பகம் சார்பில் மகேந்திரன்-தீபா திருமணம் இன்று காலை காப்பகத்தில் உள்ள சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தில் நடக்கிறது.


Tags : Leschi ,Kilpakkam Government ,Mental Hospital , Leschi incident at Kilpakkam Government Mental Hospital Graduates who came as mental patients and became lovers: Public congratulates the couple entering married life
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...