பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பணம் மோசடி செய்த பாஜ நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு: நேரில் ஆஜராக திருமங்கலம் போலீஸ் சம்மன்

சென்னை: சினிமா பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த புகாரின்படி, பாஜ நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த சினிமா பாடலாசிரியர் சினேகன் (44). இவர், கடந்த ஆக.5ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், அதில், நான் ‘சினேகம் பவுண்டேசன்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன்.

நான் என்னுடைய அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்துக்கு உட்பட்டு, தற்போது வரை செய்து வருகிறேன். சமீபகாலமாக சின்னத்திரை நட்சத்திரம் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி (41) தவறாக பயன்படுத்தியும், இணையத்தில் நான்தான் ‘சினேகன் அறகட்டளை’ நிறுவனர் என்று கூறி என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்து வருகிறார். இந்த மோசடி குறித்து வருமான வரித்துறை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். எனவே, பொது மக்களை ஏமாற்றி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகார் அளித்திருந்தார். பாடலாசிரியர் சினேகன் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஆக.8ம் தேதி நடிகை ஜெயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் மீது புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசார் ஐபிசி 420, 465 ஆகிய பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரியும் நடிகை ஜெயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: