×

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்திய கடற்படை அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் ஆய்வு: விசைப்படகில் 47 குண்டுகள் பாய்ந்த துளைகள்

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது விசைப்படகில் 47 குண்டுகள் பாய்ந்ததற்கான துளைகள் இருந்தது தெரிய வந்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வம் என்பவரது விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியை சேர்ந்த வீரவேல் (35), செல்வக்குமார் (45), செல்லத்துரை (45), தரங்கம்பாடியை சேர்ந்த கண்ணன் (40), மோகன்ராஜ் (35), விக்னேஷ் (28), செருதூரை சேர்ந்த மகேந்திரன் (33), காரைக்கால் பிரசாத் (25) சுதீர் (29), பாரத் (26) ஆகிய 10 பேர் கடந்த 15ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியான சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படை வீரர்களின் துப்பாக்கி சூட்டிற்கு மீனவர்கள் ஆளானார்கள். இதில் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததில் அவர் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 9 மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான 5 அதிகாரிகள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று காலை வந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்டனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன? படகில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு நடத்தினர். இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக விசைப்படகில் 47 குண்டுகளால் பாய்ந்த துளைகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடந்த ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகள் மதுரை புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நடுக்கடலில் நின்ற விசைப்படகை சந்தேகத்தில் பேரில் இந்திய கடற்படை, நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் படகை நிறுத்தாமல் மீனவர்கள் சென்றதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவித்தனர்.


Tags : Tamil Nadu ,Indian Navy ,Nagai port , Firing at Tamil Nadu fishermen Indian Navy officials probe at Nagai port: 47 bullet holes in barge
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...