×

மாநகராட்சி பணிகள் டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு இறுதி வாதம்: ஐகோர்ட்டில் இன்று அரசு தரப்பு வாதம்

சென்னை: மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் எந்த பங்கும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜூ, வழக்கறிஞர் கருப்பையா ஆகியோர் ஆஜராகினர்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர். வேலுமணி தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜு வாதிடும்போது, டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி. பொன்னி தலைமையில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டதால் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என்று அரசு முடிவெடுத்தது. பணிகள் செயல்படுத்தியது தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை. வழக்குப்பதிய அரசின் அனுமதி பெறவில்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும், அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும்  வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப்பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது என்று தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியும் முன் சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை. உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வேலுமணிக்கு எதிராக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பு பதில் வாதத்துக்காக மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு  (இன்று) தள்ளிவைத்தனர்.

Tags : Ex-minister ,SP Velumani , Ex-Minister S.P. Velumani's Final Argument in Municipal Corporation Works Tender Allotment Complaint: State's Argument in ICourt Today
× RELATED ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று...