×

குஜராத்தில் உள்ள வதோதராவில் ஏர்பஸ் விமான தொழிற்சாலை: நாளை மறுநாள் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

புதுடெல்லி: குஜராத்தின் வதோதராவில் ஏர்பஸ் சி295 விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைப்பதற்காக நாளை மறுநாள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகின்றார். விமானப்படையில் ராணுவ வீரர்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் ஆவ்ரோ748 விமானங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏர்பஸ்சுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி ரூ.21ஆயிரம் கோடியில் 56 சி295 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் முதல் கட்டமாக ஸ்பெயினின் செவில்லே பகுதியில் இயங்கும் ஏர்பஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து 16 விமானங்கள் 4 ஆண்டுகளில் வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உள்ள டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தொழில்முறை கூட்டாளியாக இணைந்து ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

இது தொடர்பாக கேரளாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் கூறுகையில், ‘ஏர்பஸ் சி295 விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத்தின் வதோதராவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா வருகின்ற 30ம் தேதி நடைபெறுகின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகின்றார். தனியார் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் ராணுவ விமானம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் திட்டமாகும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.21,935கோடியாகும். ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தில் செய்யப்படும் 96சதவீத பணிகள் இந்தியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் செய்யப்படும். விமானத்தின் என்ஜின் சேர்க்கப்படாது. முதல் 16 விமானங்கள் 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் 2025ம் ஆண்டு ஆகஸ்ட்க்குள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் ஏர்பஸ் விமானம் 2026ம் ஆண்டு செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகின்றது’ என்றார். முதல் முறையாக ஐரோப்பாவிற்கு வெளியே ஏர்பஸ் சி295விமானம் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Airbus ,Vadodara, Gujarat , Airbus aircraft factory at Vadodara, Gujarat: PM lays foundation stone day after tomorrow
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...