காஷ்மீர் பண்டிட் அவலநிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: காஷ்மீர் பண்டிட் அவல நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பண்டிட்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் காஷ்மீர் பண்டித் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் 10 குடும்பங்கள் சவுதரிகண்ட் கிராமத்தில் இருந்து வெளியேறியது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆதரவுடன் விபி சிங் அரசு இருந்தபோது முதல் காஷ்மீர் பண்டித் வெளியேற்றம் நடந்தது. 1986ம் ஆண்டு ராஜீவ்காந்தி அரசின்போது காஷ்மீர் பண்டிட்க்கு எதிராக முதல் வன்முறை வெடித்தது. அவர்கள் ராஜீவ்காந்தியை சந்தித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து குலாம் முகமது ஷாவின் அரசு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பாஜ அரசானது பூஜ்ய சகிப்புதன்மை குறித்து பேசுகிறது. ஆனால் அதனை ராஜீவ்காந்தி மட்டும் தான் வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 30 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் பண்டிட் அவலநிலை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை ஏன் அச்சிடக் கூடாது

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இடம்பெற்றால், பொருளாதாரம் செழிக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜ, ‘இமாச்சல பிரதேசம், குஜராத்தில் சட்டமன்ற தேர்தல்களில் இந்துக்களின் வாக்குகளை பாஜவுக்கு செல்வதை தடுக்கவே அவர் இவ்வாறு பேசி வருகிறார்’ என்று குற்றம் சாட்டியது. இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் எம்பி  மனிஷ் திவாரி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய கரன்சி நோட்டுகளில் ஏன் அம்பேத்கரின் படம் இடம்பெறக் கூடாது? ரூபாய் நோட்டின் ஒருபக்கம்  காந்தி மறுபுறம் அம்பேத்கர் இருக்கலாமே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: