பாக். ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்- பல்திஸ்தானை விரைவில் மீட்போம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் விரைவில் மீட்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான் படைகளிடம் இருந்து ஜம்மு காஷ்மீரை பாதுகாப்பதற்காக ராணுவத்தின் 1 சீக்கிய ரெஜிமெண்ட்கள் டகோடா விமானங்களில் ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இது சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ நடவடிக்கையாகும். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி காலாட்படை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 75வது ஆண்டு காலாட்படை தினம் ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் விரைவில் மீட்கப்படும். கில்ஜித்  மற்றும் பல்திஸ்தானை அடையும்போது நமது முழு இலக்கை அடைவோம். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள மக்களுக்கு எதிராக அந்நாடு  அட்டுழியங்களை செய்து வருகிறது. இதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்க  வேண்டியிருக்கும். தீவிரவாதத்துக்கு எந்த மதமும் இல்லை. ஆனால் இந்தியாவை குறிவைப்பது மட்டுமே தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்ததன் மூலமாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வந்தது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வந்தது.  வருங்காலத்தில் எந்த சூழல் வந்தபோதும், நம் முன்னால் எத்தனை பிரிவினைவாத சக்திகள் வந்தபோதும், அதுபற்றி கவலை கொள்ளாமல் அவர்களது சொந்த மொழியிலேயே பதிலளித்து விட்டு, நம்முடைய நாட்டை நாம் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Related Stories: