×

தாளவாடி மலைப்பகுதியில் சாணியால் அடித்துக் கொள்ளும் விநோத திருவிழா: ஊர்குளத்தில் கழுதை மேல் சாமி சிலையை வைத்து ஊர்வலம்

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து நான்காவது நாள் சாணியடிக்கும் திருவிழா இக்கோயிலில்  நடைபெறுகிறது. இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

பின்னர் மதியம்  அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது. ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் ஒருவரை அமரவைத்து புல்லினால் மீசைகள் செய்து அலங்காரம் செய்து சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.  கோயில் கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் வாலிபர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவருக்கொருவர் மீது அடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இதுகுறித்து கிராம பெரியவர்கள் கூறியதாவது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவர் தானியங்களை கொட்டி வைத்துள்ளார். பின்னர் அந்த பெரியவர் இறந்த பிறகு ஊர்மக்கள் தானியம் கொட்டப்பட்டிருந்த இடத்தில் சாணத்தை கொட்டி குப்பை மேடாக்கினர். இந்நிலையில் ஒருநாள் குப்பையை விவசாயநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மண்வெட்டியால் வெட்டி எடுத்தபோது குப்பைமேட்டிற்குள் சிவலிங்கம் இருந்தது.

இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அந்த கிராமத்தின் நடுவே கோயில் கட்டி சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்ததனர். சாணம் இருந்த குப்பை மேட்டிலிருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால் தீபாவளி முடிந்து 4 வது நாள் சாணியடி திருவிழா நடத்தி வருவதாகவும், அதனடிப்படையில் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெறுவதாகவும், திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என ஐதீகம் என்று தெரிவித்தனர்.  இவ்விழாவில் தாளவாடி மற்றும்  கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ் நகர் பகுதிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Tags : Bizarre festival ,Thalawadi ,Sami , A strange festival of sani beating in Talavadi hills: Sami statue on a donkey in Urkulum procession.
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!