×

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மின்விளக்குகள் எரியாததால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சாலையோர கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் முடங்கியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் தெருக்களில் மின்கம்பங்கள் இருந்தும், இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை.

ஏனெனில், அக்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பேரூர் மன்றக் கூட்டத்தில், அனைத்து கம்பங்களிலும் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, 15 வார்டுகளின் தெருக்களில் உள்ள  சாலையோர கம்பங்களில் பொருத்துவதற்காக 90 மின்விளக்குகள் வாங்கப்பட்டன. பின்னர் அவை அந்தந்த வார்டு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனினும், அவை இதுவரை முறையாக மின்கம்பங்களில் பொருத்தப்படாததால், வார்டு உறுப்பினர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன. இதனால் அனைத்து வார்டுகளும் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. குறிப்பாக, ராதா நகர் மற்றும் சோளிங்கர் சாலையில் தெருவிளக்கு எரியாததால் அங்கு செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் வாகன விபத்துகள் நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் மற்ற நகர் பகுதிகளிலும் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரியாததால், அந்தந்த வார்டுகளிலும் அவலநிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், இப்பேரூராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால் இங்கு எவ்வித அடிப்படை வசதி மற்றும் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. வளர்ச்சி திட்டப் பணிகளும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, இங்குள்ள கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தி இரவு நேரங்களில் எரிவதற்கும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Pallipattu , Schools, municipalities, electricity, increase in crime
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...