தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாரிமங்கலம் பகுதியில் அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலங்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கட்டாரிமங்கலம், அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 67 ஏக்கர் நிலம் சாத்தான்குளம் வட்டம், கருங்கடல் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலங்கள் பல நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களாக குத்தகை தொகை செலுத்தாததால், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் திரு.சங்கர், தனி வட்டாட்சியர் திரு. ஈஸ்வரநாதன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.