×

பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பணம் மோசடி; பாஜ நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு: நேரில் ஆஜராக திருமங்கலம் போலீஸ் சம்மன்

சென்னை: சினிமா பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை  பெயரில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த புகாரின் படி, பாஜ நிர்வாகியான நடிகை  ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த சினிமா பாடலாசிரியர் சினேகன்(44). இவர் கடந்த ஆக.5ம் தேதி  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.  

அந்த புகாரில், நான் ‘சினேகம் பவுன்டேசன்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை 23.12.2015 முதல் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளையை ஒன்றிய அரசின் வருமான வரித்துறை அங்கீகரிக்கப்பட்டு அதற்கு 12ஏஏ என்ற சான்றிதழும் வழங்கியுள்ளது. சினேகம் பவுன்டேஷன் என்ற பெயரில் பேன்கார்டும் உள்ளது. நான் என்னுடையே அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்திற்கு உட்பட்டு, எந்த வித புகாருமின்றி தற்போது வரை செய்து வருகிறேன்.

 சமீப காலமாக என்னுடைய அறக்கட்டளை பெயரை சின்னத்திரை நட்சத்திரம் மற்றும் வழக்கறிஞருமான ஜெயலட்சுமி(41) என்பவர் தவறாக பயன்படுத்தியும், தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் நான் தான் ‘சினேகன் அறகட்டளை’ நிறுவனர் என்று பொது மக்களுக்கு நற்பணி செய்வதாகவும், அதற்கு இணையதளம் மூலம் எனக்கு ெசாந்தமான அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்து வருகிறார்.

நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாக எனக்கு வருமான வரித்துறையால் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். நானும் பொது தளங்களில் ஜெயலட்சுமி செய்து வரும் மோசடிகளை நான் பார்வையிட்ட போது, அவர் என்னுடைய அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் தவறான விலாசம் மற்றும் விபரங்களை கொடுத்து பொது மக்களை ஏமாற்றி வருவது உறுதியானது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

பாடலாசிரியர் சினேகன் புகாருக்கு மறுப்பு  தெரிவிக்கும் வகையில் ஆக்.8ம் தேதி நடிகை ஜெயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் மீது புகார் அளித்திருந்தார். இந்த இரண்டு புகார்களின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாடலாசிரியர் சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வலுத்தித்து மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசார் ஐபிசி 420, 465 ஆகிய பிரிவுகளின் கிழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர். ேமலும், இந்த மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க கோரியும் நடிகை ஜெயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Lyricist Snegan Trust ,BJP ,Jayalakshmi ,Thirumangalam , Lyricist Snegan Foundation, money fraud, case filed against BJP executive actress Jayalakshmi,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...