சென்னையில் இருந்து சென்ற ரயிலில் கோளாறு நாகர்கோவிலில் 3 மணி நேரம் நிறுத்தம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 5.05 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்து புறப்பட்டு கன்னியாகுமரி செல்ல வேண்டும். காலை 5.55 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்துவிடும். அந்த வகையில் இன்று காலை நாகர்கோவில் சந்திப்புக்கு காலை 5.05 மணிக்கு வந்து சேர வேண்டிய ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக 5.20க்கு சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் இறங்கினர். ஐந்து நிமிடங்களில் புறப்பட்டு செல்ல வேண்டும்.

ஆனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி செல்ல வேண்டிய பயணிகள் குழப்பமடைந்தனர். ரயில் தாமதமாக புறப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டபோதிலும் எப்போது புறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாததால் பயணிகளிடையே குழப்பம் மேலும் அதிகரித்தது. ரயில் வந்து சேர்ந்த நிலையில் ரயிலில் இரண்டாவது பெட்டியை இன்ஜினுடன் இணைக்கின்ற பகுதி உடைந்துவிட்டது. இதனால் ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் ரயிலை தொடர்ந்து இயக்க பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 2.30 மணிநேரத்திற்கும் மேலாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவிடப்பட்டது. பழுதை சரிசெய்த பிறகு 3 மணிநேரம் தாமதமாக  ரயில் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றது.

Related Stories: