×

திண்டுக்கல் மலைக்கோட்டையின் வரலாற்றை அறிய தகவல் பலகை: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகள் வைப்பதுடன், குடிநீர்- கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் மலைக்கோட்டை உள்ளது. நாயக்க மன்னர்கள் ஆட்சியின் போது முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் 1605ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மலைக்கோட்டை சுமார் 290 அடி உயரமும், 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது.

கடல் மட்டத்திலிருந்து 372 மீட்டர் உயாத்தில் அமைந்துள்ள இம்மலைக்கோட்டையில் ஏறுவதற்காக ராணிமங்கம்மாள் காலத்தில் 600 படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் எதிரிகளை கண்காணிக்கும் மதில் சுவர் அரண்கள், சிறைச்சாலை கூடங்கள், 11 கொத்தளங்கள், கோட்டையின் முகப்பில் பீரங்கி, மலைக்கோட்டையின் உச்சியில் கொடி மரத்துடன் கூடிய சிவன் கோயில், மிக நுட்பமான செதுக்கப்பட்ட கட்டிடக்கலை அமைப்புகளுடன் புடைப்பு சிற்பங்கள், சமணப் படுகைகள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலைக்கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வார விடுமுறையில் வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கல்வி சுற்றுலாவிற்காக வரலாற்று மாணவர்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். காலை 9 மணி முதல் 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ கிடையாது. மேலும் இந்த மலைக்கோட்டையின் வரலாறு குறித்து எந்த இடத்திலும் தகவல் பலகை அமைக்கப்படவில்லை. எனவே இந்திய தொல்லியல் துறையினர் மலைக்கோட்டையின் வரலாற்றை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு இடங்களிலும் தகவல் பலகை அமைப்பதுடன், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dintukal , Information board to know the history of Dindigul hill fort: tourist request
× RELATED திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளி படுகாயம்